திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.50 திருவலிவலம் பண் - பழந்தக்கராகம் |
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே.
|
1 |
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.
|
2 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.
|
3 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.
|
4 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்னிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
|
5 |
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.
|
6 |
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
|
7 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.
|
8 |
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.
|
9 |
பொதியிலானே(*) பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.
(*) பொதியில் என்பது பொதிகைமலை. வைப்புத்தலங்கள் ஒன்று.
|
10 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.123 திருவலிவலம் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி |
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.
|
1 |
இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.
|
2 |
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.
|
3 |
அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.
|
4 |
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
|
5 |
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.
|
6 |
நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.
|
7 |
இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.
|
8 |
தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.
|
9 |
இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைவலி மதில்வலி வலமுறை யிறையே.
|
10 |
மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |